காஷ்மீர் பிரச்னை எதிரொலிவேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு

வேலூர்: காஷ்மீர் பிரச்னை எதிரொலியாக வேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரியும் நபர்கள், வெளியூர் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

அதேபோல், ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய நாட்டின் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கென மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், அரசு அலுவலக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், சாலையோரம் பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மேற்பார்வையில் எஸ்எஸ்ஐ மோகனம் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல் புரம் பொற்கோயில் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதேபோல் முக்கிய சாலை சந்திப்புகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் லாட்ஜ்களில் அதிரடி சோதனைகள் நடந்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: