அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதி தேர்வு

வேலூர்: நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீட், ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், இந்த தகுதி தேர்வு நேற்று அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான வினா மற்றும் விடைக்குறிப்புகள் முதன்மை கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்த வினா மற்றும் விடைகளை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் மின்னஞ்சல் மூலம் வரும் 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளான நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேருவதற்கான போட்டி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களை தலைமையாசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த மதிப்பெண்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் 32 மாவட்டங்களிலும் நீட் மற்றும் ஜேஇஇ போட்டித்தேர்வு பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதற்கான குறுந்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: