×

திருவனந்தபுரம் கோட்டத்தில் 6 மாதத்தில் 167 பேர் பலி ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறினால் இனி அபராதம் ரயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது

நாகர்கோவில், ஆக.8: ரயில்கள் புறப்பட்ட பின்னர் ரயில் நிலையங்களில் பயணிகள் ஓடிச்சென்று ஏறுவதும், இறங்குவதும், அவ்வாறு இறங்கும்போது தடுமாறி தண்டவாளத்தில் விழுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்றவை நிகழ்கின்றன. சமீபகாலமாக இதுபோன்ற விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கிறது. இந்தநிலையில் ரயில்கள் ஓடத்தொடங்கிய பின்னர் ஓடிச்சென்று ஏறுதல், பாய்ந்தவாறு இறங்குதல் போன்றவற்றில் மட்டும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு 280 பேரும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆறு மாத காலத்தில் 167 பேரும் விபத்துகளில் சிக்கி இறந்துள்ளனர்.ரயில்வே சட்டப்படி ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் குற்றம் ஆகும். இதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் வழிவகைகள் உள்ளன. இந்தநிலையில் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் முதலில் பிடிபட்டாலும் விடுவிக்கப்படுவர். தொடர்ந்து பிடிபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் செல்போன் பயன்படுத்தியவாறே ரயிலில் ஏற முற்படுவதும், இறங்க முயற்சிப்பதும் விபத்துகளுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதனை போன்று ரயில் தண்டவாளங்களை குறுக்கே கடப்பதும் குற்றம் ஆகும். அவ்வாறு ரயில் வரும் வேளையில் நிலையங்களில் ரயில் தண்டவாளத்தை கடக்கின்றவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...