வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு

வேலூர், ஆக.7:வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மூடி ‘சீல்’ வைத்தனர். இரவு 9 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் இருட்டு அறையில் வரிசை எண்படி பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று அதிகாலை வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் சுதன் பண்டாரிநாத் கடே, போலீஸ் பாதுகாப்பு அதிகாரி ஆதித்யகுமார், தேர்தல் சிறப்பு பார்வையாளர் முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர் வினய்குமார் சிங், கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோரது தலைமையில், சப்-கலெக்டர் மெகராஜ், டிஆர்ஓ பார்த்திபன், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் பணியில் 97 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர். வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இருட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படுகிறது.

ஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்களுடன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீசார் என 240 காவலர்கள் மற்றும் 110 துணை ராணுவத்தினர் என மொத்தம் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர், சுகாதார வசதி, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளளது. வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணிப்படும். வரும் 9ம் தேதி காலை வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: