×

விவசாயிகள் தயாரிக்கும் மரசெக்கு எண்ணெய் விற்பனை துவக்கம்

அரியலூர், ஜூலை 25: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் டால்மியா சிமென்ட் நிறுவனம் மேற்பார்வையில் அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த மரசெக்கு எண்ணெய் விற்பனையை கலெக்டர் வினய் துவக்கி வைத்து பேசியதாவது: அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் 2016 துவங்கப்பட்டு நபார்டு வங்கி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனம் மேற்பார்வையில் 2013 கம்பெனி சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு 400 விவசாயிகளை கொண்டு இயங்கி வருகிறது. அரியலூர் பேருந்து நிலையம் செட்டிஏரி அருகில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் மற்றும் மாவட்டநிர்வாகத்தின் உதவியுடன் தரிசுநில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சத்துக்கு மானியமாக பெற்று மரசெக்கு எண்ணெய் இயந்திரம், மாட்டுத்தீவனம் தயாரிக்கும் இயந்திரம், மிளகாய் அரவை இயந்திரம் மற்றும் கடலை உடைப்பு இயந்திரம் ஆகிய வேளாண்மை மதிப்புக்கூட்ட இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மரசெக்கு எண்ணெய் வகைகள், மசாலா பொருட்கள், சிறுதானிய மாவுப்பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று மதிப்புக்கூட்டி அரியலூர் அரிமா என்ற தரத்தின் பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். மாதம் 50,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் 2 மடங்குகளாக உயர்கின்றன. மேலும் இந்த விற்பனையை ஊக்குவிக்கும் வண்ணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதைதொடர்ந்து அரியலூர் மாவட்ட காய்கறி உற்பத்தியாளர். விவசாயிகள். உற்பத்தி நிறுவன விவசாயிகளுக்கு இ அடங்கல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் நீர் மேலாண்மை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் நாகநாதன், வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி, இளநிலை பொறியாளர் பச்சைமுத்து, நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், டால்மியா சிமென்ட்ஸ் பாரதி, சுதாகர், அரியலூர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் ராஜகோபால், சுதாகரன், அண்ணாமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்