×

ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளியையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்



சிவகங்கை, ஜூலை 24: ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளியையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் வழி, காளையார்கோவில் வழி, காரைக்குடி வழி, இளையான்குடி வழியில் டவுன் பஸ்கள் மிகக்குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண நாட்களில் காலை, மாலை நேரங்களில் அதிகப்படியான கூட்ட நெரிசல் காணப்படும். கிராமங்களில் இருந்து காலை நேரத்தில் நகரங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் என ஏராளமானோர் போதிய டவுன்பஸ் இல்லாததால் கடுமையான கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு வருவர். இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் மாவட்டத்தில் உள்ள மடப்புரம் காளி கோவில், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோவில், கொல்லங்குடி காளியம்மன் கோவில், காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் கோவில்களில் சென்று வழிபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து பஸ்களில் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஆக.3ம் தேதி ஆடிப்பெருக்கு நாளாகும். இந்நாளில் கூடுதல் பஸ்கள் இல்லாமல் வழக்கமாக எண்ணிக்கை குறைவான பஸ்களே இயக்கப்பட்டால் கடும் கூட்ட நெரில் ஏற்படும். இப்பகுதியில் டவுன் பஸ்களும் குறைவு என்பதால் ரூட் பஸ்களிலும் அதிக கூட்டம் காணப்படும். இதனால் நீண்டதூர ஊர்களுக்கு செல்வோரும் கடும் அவதியடையும் நிலை ஏற்படும். எனவே ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளியை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், விசேஷ நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. காலை 7.30 மணியிலிருந்து 9 மணிவரை மற்றும் மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை சிவகங்கையிலிருந்தும், சிவகங்கைக்கு வருவதற்கும் சுற்றுப்பகுதியில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான டவுன் பஸ்களை தற்போதும் இயக்கி வருகின்றனர். இதனால் பண்டிகை, விசேஷ காலங்களில் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளியின் போது கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்