×

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

ஊட்டி, ஜூலை 24: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பணி ஓய்வுபெறும் நாளான்று கடந்த மே மாதம் 31ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து போராட்டங்களை வழிநடத்தியுள்ளார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கிலும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கிலும் அரசு ஓய்வுபெறும் நாளான்று சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்துள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாநிலம் தழுவிய உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊட்டியில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சலீம் தலைமை வகித்தார். 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி செயலர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என 225 பேர் பங்கேற்றனர். இதனால் குடிநீர், சத்துணவு, 100 நாள் திட்டம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிப்படைந்துள்ளன.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி