தாரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு

மேச்சேரி, ஜூலை 24: தாரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடம்பட்டி, பெரியகாடம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட 4 சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் உப்பு பள்ளத்தில் சரபங்கா ஆற்றங்கரையோரம் உடல் அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மூலக்கடை காலனி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(31) என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பிரேதப் பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அம்மன் கோயில் விரிவு சாலையில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அரசு புறம்போக்கில் உடலை அடக்க செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். உடல் அடக்கம் செய்யவதற்காக தனியாக மயானம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை விட்டு விட்டு பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாப் பகுதியில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உரிய அனுதி பெற்றுள்ளதாக ராஜமாணிக்கம் உறவினர்கள் தரப்பில் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மோதல் அபாயம் உருவானது. இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாரமங்கலம் மற்றும் தொளசம்பட்டி பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இருதரப்பினரிடமும் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் அமரர் ஊர்தியில் எடுத்து வரப்பட்ட ராஜமாணிக்கத்தின் உடலை அங்கு கொண்டு வந்தனர். இதனால், பரபரப்பு அதிகமானது. இதையடுத்து, அப்பகுதியில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு குவிந்தனர். அப்போது, அவர்களை தாரமங்கலம் காவல் ஆய்வாளர் சின்னுசாமி சமரசப்படுத்தினார். அப்போது, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உடல் அடக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி கூறினார். இதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, ராஜமாணிக்கத்தின் உடல் உப்பு பள்ளம் பகுதியில் சரபங்கா நதிக்கரையோரத்தில் அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 7 மணி நேரம் நிலவிய பரபரப்பு அடங்கியது.

Related Stories: