ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம் வீரபாண்டி, கெங்கவல்லியில் பணிகள் பாதிப்பு

ஆட்டையாம்பட்டி, ஜூலை 24: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவர், கடந்த மே 31ம் தேதி ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருவேரங்கன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சுப்பிரமணியம், ராஜா, அருணாசலம், பழனிவேல் உட்பட 80க்கு மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கெங்கவல்லி: கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சேலம் மாவட்ட தலைவர் வாசு தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அனைவரும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எவ்வித பணிகளும் செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு அலுவல்களுக்காக வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: