வீரகனூரில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் குடிநீர் குழாய் துண்டிப்பால் அதிர்ச்சி

கெங்கவல்லி, ஜூலை 24: வீரகனூர் பேரூராட்சி 1வது வார்டு பகுதியில் குடிநீர் சப்ளை சீர்செய்யக்கோரி புகார் கொடுத்ததால் குழாயை துண்டித்து நெருக்கடி கொடுத்து வருவதாக பெண்கள் குற்றச்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சி 1வது வார்டு அம்பேத்கர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் சப்ளை சீர்செய்யக்கோரி பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட கலெக்டருக்கு புகாராக தெரிவித்திருந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில் குடிநீர் சப்ளையை சீர்செய்ய பேரூராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் பிடிப்பதற்காக அக்கம் பக்கத்து வீடுகளுக்கு செல்லும்போது எதிர்ப்பு தெரிவிப்பதால் வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து வீரகனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும், போலீசார் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், புகார் தெரிவித்த பெண்களின் வீட்டிற்கு முன்புறம் இருந்த குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், குடிநீர் சப்ளை சீர்செய்யக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டருக்கு புகார் தெரிவித்தோம். இதனால், அதிருப்தியடைந்த வீரகனூர் பேரூராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து விட்டது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, “நீங்களே குடிநீர் குழாயை உடைத்து எடுத்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறீர்களா” என கூறி எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். எங்களுக்கான குடிநீர் குழாயை, நாங்களே எதற்காக உடைக்க வேண்டும். கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பேரூராட்சி நிர்வாகமும், தனிப்பட்ட பகை காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த சிலரும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: