×

விலை உயர்வு, தட்டுப்பாடு எதிரொலி கோழித்தீவனம் தயாரிக்க மக்காச்சோளத்துக்கு பதில் கம்பை அதிகமாக பயன்படுத்தலாம்

நாமக்கல், ஜூலை 24:  மக்காச்சோளத்தின் தட்டுபாடு அதிகமாக இருப்பதால், கோழித்தீவனம் தயாரிக்க மக்காசோளத்துக்கு பதில், கம்பை அதிகமாக பயன்படுத்தலாம் என, மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் கோழிப்பண்ணையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்து விட்டதால், மக்காச்சோளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மக்காச்சோளத்துக்கு பதிலாக, கோதுமை, கம்பு, அரிசி, குருணை ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம். வடமாநிலங்களில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் கோதுமை, கம்பு ஆகியவற்றை தான் முக்கிய மூலப்பொருளாக உபயோகிக்கிறார்கள். இது நீண்ட நாட்களாக நடைமுறையில் உள்ளது. அந்த மாநிலத்தில் மக்காச்சோளத்தை கோழித் தீவனத்தில் இருந்து எடுத்து விட்டார்கள். குறிப்பாக பரோடா மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் மக்காச்சோளத்தை எடுத்துவிட்டு கம்பு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது நாம் இதை கடைபிடித்து வருகிறோம். இதில் எவ்வித பாதிப்பும் இல்லை என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பண்ணையாளர்கள் மக்காச்சோளம் கிடைக்கவில்லை என கவலைபட தேவையில்லை. மக்காச்சோளத்துக்கு பதிலாக கோதுமையை பயன்படுத்தலாம். மக்காச்சோளத்தின் அளவை குறைத்தும் உபயோக படுத்தலாம். மக்காச்சோளத்துடன் கம்பு, அரிசி, குருணை, கோதுமை போன்ற மூலப் பொருட்களை கோழித்தீவனத்திற்கு போதுமான சத்துக்களை கொடுக்கிறது. மக்காச்சோளம்  இல்லாமலேயே கோழிகளுக்கு தீவனம் கொடுக்கலாம். இதன் மூலம் கோழித் தீவனத்திற்கு டன் ஒன்றுக்கு 100 கிலோ மக்காச்சோளம் உபயோகப் படுத்தினால் போதும். இதனால் தீவனத்திற்கு டன் ஒன்றுக்கு ₹1500 மிச்சப்படுத்தலாம். இதை கடைபிடித்து பண்ணையாளர்கள் பயனடையலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வாங்கிலி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்