×

சென்னப்பன்கொட்டாயில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

பாலக்கோடு, ஜூலை 24: பாலக்கோடு அருகே சென்னப்பன்கொட்டாயில்  கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நெல்லூர் ஊராட்சியில் சென்னப்பன் கொட்டாய் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதியில் போர்வெல் மூலம் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15நாட்களுக்கு ஒருமுறை தான் இப்பகுதி மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியிலும் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதிவில்லை. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 15நாட்களுக்கு ஒரு முறை, இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு வீட்டுக்கு 3குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா