×

கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், கொப்பரையை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் 7,486 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. இதில் 786 லட்சம் தேங்காய் உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி அதிகரித்து தேங்காய் விலை குறையும் போது, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தேங்காய் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், மாவட்டத்தில் பந்து கொப்பரை 50 மெட்ரிக் டன், அரவை கொப்பரை 450 மெட்ரிக் டன் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசால் 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான, பந்து கொப்பரை கிலோ ₹99.20 மற்றும் அரவை கொப்பரை கிலோ ₹95.21 விலையில், இம்மாதம் கடந்த 7ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வரும் 2020 ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும். எனவே, தென்னை விவசாயிகள், கூட்டுறவு சங்கத்தை அணுகி, தங்களது பெயர்களை பதிவு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா