×

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கல்

பொன்னமராவதி, ஜூலை 24: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கவும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016ல் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள பழைய அட்டைகளை புதுப்பிக்கும் விதமாக இம் முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் தேசிய அளவிலான மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. புதிதாக மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வாரம் தோறும் திங்களன்று புதுக்கோட்டை பேருந்து நிலையம் மேற்குபுறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை இளநிலை மறுவாழ்வு அலுவலர் வசந்தராம்குமார், முடநீக்கு வல்லுநர் ஜெகன்முருகன் தலைமையிலான குழுவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா