×

காலக்கெடு முடிந்த உவர்நீர் இறால் பண்ணைகள் பதிவுசான்று உரிமம் புதுப்பிக்க வேண்டும் உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்டத்தில் உவர்நீர் இறால் பண்ணைகள் அமைத்திருப்பவர்கள் அதற்கான பதிவுச்சான்று உடனடியாக பெற வேண்டும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளுக்கும் கடல்சார்நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக உரிய பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005-ன் படி திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஒரு உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவின்றி செயல்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உரிமம் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் மாவட்டத்தில் 154 உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவுச்சான்றானது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பதால் இதற்கான காலக்கெடு முடிந்த பண்ணைகளுக்கு உடனடியாக பதிவுச்சான்றின் உரிமத்தினை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவு சான்று வழங்கப்படாது என்பதுடன் இவ்வாறு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச்சான்றிதழ் பெற்றிடவும், 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுச்சான்றின் உரிமத்தினை புதுப்பிக்கவும் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...