×

காணாமல் போன மனைவியை தேடி 16நாட்களாக பசியோடு அலையும் பாசக்கார கணவன்

முத்துப்பேட்டை ,ஜூலை24: முத்துப்பேட்டையில் காணாமல் போன மனைவியை தேடி 16 நாட்களாக சாப்பிடாமல் ஊர்ஊராக பசி பசிபட்டினியுடன் அலையும் கூலித்தொழிலாளியான கணவரின் நிலை பரிதாபமாக உள்ளது.தஞ்சை மாவட்டம், கரம்பக்குடி அடுத்த திருவோணம் ஊராட்சி நெய்வேலி வடபாதி கள்ளர்தெருவை சேர்ந்தவர்மாரியப்பன் மகன் முத்துக்குமார்(40). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மலர்(30) என்ற மனைவியும், 10ம் வகுப்பு படிக்கும் தினேஷ்(15), 7ம் வகுப்பு படிக்கும் லோகேஷ்(12) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாரின் மனைவி மலர் கடந்த ஒருமாதமாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மலரை முத்துப்பேட்டை தர்காவிற்கு அழைத்து சென்று பிரார்த்தனை செய்தால் சரியாகிவிடும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முத்துக்குமார் தனது உறவினர் பெண்ணோடு மலரை அனுப்பியுள்ளார்.அதன்படி முத்துப்பேட்டை தர்காவிற்கு உறவினருடன் சென்ற மலர்அங்கே படுத்திருந்தார். உறவுக்கார பெண் அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு வந்து பார்த்தபோது மலரை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த முத்துக்குமார் முத்துப்பேட்டை முழுவதும் தேடியும் மலர் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்தார். அப்பொழுது பணியில் இருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனால் முத்துக்குமார் என்ன செய்வது? என்று திக்கு தெரியாமல் அலைந்தார். மனைவி மீது பெரிதும் ஏக்கம் அடைந்த முத்துக்குமார் கடந்த 16நாட்களாக சாப்பிடாமல் தண்ணீர், டீ மட்டும் குடித்துக்கொண்டு பசி பசிபட்டினியுடன் தனது மனைவியை தேடி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் போன்ற ஊர்களுக்கு அலைந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டைக்கு வந்து பல்வேறு பகுதிக்கு சென்று தேடிய முத்துக்குமார் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் தனது மனைவியின் போட்டோவை காட்டி “எங்கேயாவது பார்த்தீங்களா?” என்று தனது மனைவியை தேடி அலைந்தது பார்க்க பரிதாமாக இருந்தது.இதுகுறித்து முத்துக்குமார்கூறுகையில்: எனது மனைவிதாங்க எனக்கு உசுரு.. என்னை பிரிந்து அவள் ஒருநாள் கூட இருந்ததில்லை.. யாரிடமும் அவள் வாங்கி சாப்பிட்டது கிடையாது.கடந்த ஒரு மாதமாக குடும்ப கஷ்டத்தை நினைத்து மன அழுத்தத்தில் இருந்தால் உறவினர்கள் கூறியபடி இங்கு அழைத்து வந்தோம்.. அழைத்து வந்த சிலமணிநேரத்தில் மனைவி காணாமல் போனதும் முத்துப்பேட்டை காவல் நிலையம் வந்து அங்கிருந்த போலீசாரிடம் புகார் செய்ய சென்றேன் என்னை அலட்சியப் படுத்தியதுடன் கேவலமாக பேசி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். நான் வேலைக்கு சென்றும் சரிவர சாப்பிட்டும் 16நாட்களுக்கு மேலாகி விட்டது. தினந்தோறும் பசி பசிபட்டினியுடன் மனைவியை தேடி சுற்று பகுதியில் அலைந்து வருகிறேன்.. இன்று மீண்டும் முத்துப்பேட்டைக்கு வந்து பல இடங்களில் தேடினேன். எனது மனைவியின் போட்டோவை பார்த்து யாராவது கண்டுபிடித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...