திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இறகுபந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி நாளை நடக்கிறது

திருச்சி, ஜூலை 24: மாவட்ட அளவிலான இறகுபந்து வீரர், வீராங்கனைகளுக்கு தேர்வுப் போட்டிகள் நாளை (25ம் தேதி) காலை திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக அளவில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இறகுபந்து அகாடமி 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2019-2020ம் ஆண்டுக்கான தேர்வுப் போட்டிகள் மாவட்ட அளவில் இறகுபந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நாளை காலை 8 மணியளவில் அண்ணா விளையாட்டரங்க உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த அகாடமியில் சேர, 16 வயதிற்குட்பட்ட சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 15 நபரை தேர்வு செய்து அவர்களுக்கு மாதத்தில் 25 நாட்கள் காலை, மாலை இருவேளைகளிலும் பயிற்சி அளிக்கப்படும். தேர்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிகள்: 16 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் 15 பேருக்கு சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு தினசரி பயிற்சி வகுப்புகளும், நாளொன்றுக்கு ஒரு நபருக்கு சிற்றுண்டி செலவினத்திற்காக ரூ.30 மற்றும் போக்குவரத்து கட்டணமாக ரூ.20 வழங்கப்படும். விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம் திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: