×

கீழமுல்லைக்குடி குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க இணையத்தில் பதிவு கலெக்டர் தகவல்

திருச்சி, ஜூலை 24: கீழமுல்லைக்குடி அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் பதிவு செய்து மணல் விற்பனை செய்யப்பட உள்ளதாக திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடி கிராமம் காவிரி ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மணல் குவாரியில் அதிகப்படியான மாட்டு வண்டிகள் வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிங்களில் மணல் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் பதிவு செய்து மணல் விற்பனை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, கீழமுல்லைக்குடி மணல் குவாரியில் மணல் ஏற்ற வரும் மாட்டுவண்டிகள் இணையதள பதிவு செய்வதற்கான படிவம் திருவெறும்பூர், ரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி தாலுகாவுக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உள்ளது. மாட்டு வண்டி உரிமையாளர்கள் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து 24ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்படி ஆவணங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் மாட்டுவண்டி உரிமையாளர்களின் கைபேசி எண்ணிற்கு இந்த மணல்குவாரியில் மணல் ஏற்ற வரும் தேதி குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்க பெற்ற மணல் மாட்டுவண்டிகளுக்கு மட்டும் இனி மணல் வழங்கப்படும். மாட்டு வண்டி உரிமையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் போலி என அறிய நேர்ந்தால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு