×

தா.பேட்டை அருகே பாப்பாபட்டியில் குவாரி செயல்பட தடை அதிகாரிகள் சமரசத்தால் மக்கள் மறியல் வாபஸ்

தா.பேட்டை, ஜூலை 24: முசிறி தாலுகா அலுவலகத்தில் பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் குவாரி செயல்பட தடைவிதித்ததன் காரணமாக நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.தா.பேட்டை ஒன்றியம், பூலாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பாப்பாபட்டியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு காலை, மாலை நேரங்களில் பாறைகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. குவாரியிலிருந்து அதிக லாரிகள் இயக்கப்படுவதால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பூலாஞ்சேரி கிராமத்தில் உள்ள குன்றை ஏலம் விடாமல் அரசு அனுமதியில்லாமல் ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்யப்பட்டதை அளவீடு செய்து கனிம வளத்தை திருடியவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும். சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரின் உத்தரவினை அமல்படுத்த வேண்டும். 2013லிருந்து தற்போது தேதி வரை பூலாஞ்சேரி, பாப்பாபட்டி கிராமத்திலிருந்து கல்குவாரிகள் மீது புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்தும் இன்று பாப்பாபட்டியில் சாலை மறியல் செய்ய போவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.இதையடுத்து முசிறி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் வடிவேல் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட குவாரியில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குவாரியை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தவிருந்த சாலை மறியலை பொதுமக்கள் தற்காலிமாக கைவிட்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ