விசாரணைக்கு ஆஜராகாததையடுத்து பிடிவாரண்ட் தேமுதிக மாவட்ட செயலாளர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

திருச்சி, ஜூலை 24: திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் கடைவீதியில் கடந்த 2013ம் ஆண்டு தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய கட்சியின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய சேலம் மாவட்ட செயலாளருமான இளங்கோவன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து அவதூறாக பேசினார். இதுகுறித்து அப்போதைய அரசு வக்கீல் அசோகன், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகுமாறு இளங்கோவனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த மாதம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத இளங்கோவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்த இளங்கோவன், பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி வக்கீல் மூலம் மனு அளித்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி முரளிசங்கர், பிடிவாரண்டை ரத்து செய்து வழக்கின் விசாரணையை ஆக.13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: