கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான 26ல் ரூ.8.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மேஜர் சரவணன் நினைவகம் திறப்பு பீகார் ரெஜிமென்ட் கர்னல் மேஜர் ஜெனரல் பங்கேற்பு

திருச்சி, ஜூலை.24: கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான வரும் 26ம் தேதியன்று ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட மேஜர் சரவணன் நினைவகம் திருச்சியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன். அவரது வீரதீர செயல்களை பாராட்டி பாட்டலிக்கின் கதாநாயகன் எனும் நாட்டின் உயரிய விருதான வீரசக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் சரவணனின் குடும்பத்தார் மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி மாணவ, மாணவியர்களை நாட்டின் பாதுகாப்பு படையில் சேர ஊக்குவிக்கின்றனர்.திருச்சி வெஸ்ட்ரி பள்ளி முன்பு மேஜர் சரவணன் நினைவகம் அமைத்துள்ளனர். இந்த நினைவு ரவுண்டான கடந்த 2007ம் ஆண்டு ரூ.7.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு இந்த நினைவகம் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் திறக்கப்பட உள்ளது.இதுகுறித்து மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு மேஜர் சரவணன் நினைவகம் புனரமைக்கப்பட்டுள்ளது. நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அசோகா சின்னம், ராணுவ படை முத்திரை, வீர சக்ரா முத்திரை மற்றும் சரணவன் பணிபுரிந்த பீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது. கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான 26ம் தேதி ராணுவ முறைப்படி புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறக்கப்பட உள்ளது. கலெக்டர் சிவராசு தலைமையில் பீகார் ரெஜிமென்ட் கர்னல் மேஜர் ஜெனரல் தேஜ் பீர் சிங் திறந்து வைக்கிறார். போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், பிரகேடியர் நடராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்’ என்றார்.

Related Stories: