காவிரியின் குறுக்கே கதவணை கட்டும்

பட்டுக்கோட்டை, ஜூலை 24: காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடகோரி பட்டுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் தலைமை வகித்தார். டிஎஸ்பி கணேசமூர்த்தி, தாசில்தார்கள் பட்டுக்கோட்டை அருள்பிரகாசம், பேராவூரணி ஜெயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். பின்னர் விவசாயிகளின் விவாதம் வருமாறு:பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் அதிகளவு காட்டாறுகள் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த ஆற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு நடந்து வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ஆறுகளில் மணல் திருடப்படுவதால் நிலத்தடி நீர் முழுவதும் உப்புநீராக மாறிவிட்டது. எனவே மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் உரிய நீரை திறந்து விடாததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் ஒருபோக நெல் சாகுபடி கூட செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கடந்த 15ம் தேதி பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது பொதுப்பணித்துறை அமைச்சரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, காவிரியின் குறுக்கே ரூ.565 கோடியில் கதவணை கட்டப்படும் என்றார். இந்த அணை கட்டுவதால் யாருக்கு பயன் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரி, குளங்களில் காவிரிநீர் கொண்டு நிரப்பப்படும் என்று அறிவித்தார். கர்நாடக அரசைவிட தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற இந்த அறிவிப்பானது ஒரு சொட்டு தண்ணீர்கூட கல்லணைக்கு வந்து சேரமுடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகளான எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளோம் என்றார்.இதைதொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

தம்பிக்கோட்டை ராஜராமலிங்கம்: ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜமாபந்தி கூட்டம் ஒரு போலியானது. இதில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நஞ்சை, புஞ்சை, மனை இனவாரி பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படாததால் வறட்சி, வெள்ளம், புயல் நிவாரணங்களை சரியாக பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஏரிகளில் சவ்வூடு மண் எடுப்பதில் மதகு மட்டத்தைவிட மிக ஆழமாக எடுப்பதால் நீர் ஏரிக்குள்ளே தேங்கி பாசனத்துக்கு மதகு வழியாக வருவதில்லை. தென்னை நாற்றுக்கள் தேர்வு செய்து சரியான தரத்தில் எடுக்கப்படாமல் தரமற்ற தென்னங்கன்றுகளை அரசு உற்பத்தி செய்து கொடுத்ததால் அதுமுறையாக காய்ப்பதில்லை என்றார்.விவசாயிகள் மதுக்கூர் நாராயணன், முத்துவேல் ஆகியோர் பேசுகையில், மதுக்கூர் வடக்கில் 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பேரியில் குடிமராமத்து செய்ய ரூ.10 கோடி அரசு நிதி ஒதுக்க வேண்டும். இதனால் 2,000 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றனர்.

பள்ளத்தூர் கூத்தலிங்கம்: பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை இழப்பீடு வழங்கப்படாமல் விடுபட்டுபோன வீடுகள் மற்றும் தென்னை மரங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

புனல்வாசல் சவரிமுத்து: புனல்வாசல் பெரிய ஏரி, பிரண்ட குளம் ஏரிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புனல்வாசல் ஊராட்சியில் குடிநீர் தொட்டியிலிருந்து தெருக்குழாய்கள் மூலம் தண்ணீர் செல்வதை தடுத்து குடிநீர் உறிஞ்சுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.பெரியகோட்டை ராமலிங்கம்: பெரியகோட்டை விஏஓ ஊராட்சி அலுவலகம் எதிரில் பழுதடைந்த குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். மேலும் விவசாயிகள் கமால்பாட்சா, ஜெயச்சந்திரன், அண்ணாத்துரை, மெய்கண்டன் உட்பட ஏராளமான விவசாயிகள் பேசினர். சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ்: பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாவில் உள்ள ஏரி, குளங்களின் வரைபடங்களை ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்க பெறாதவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: