கிசான் கடன் அட்டைகள் 5 ஆண்டு வரை செல்லும்

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 24: கிசான் கடன் அட்டைகள் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என்று அலமேலுபுரம் பூண்டியில் நடந்த உழவர் கடன் அட்டை வழங்கும் முகாமில் தகவல் தெரிவிக்கப்பட்டது.பூதலூர் வட்டாரத்தில் உள்ள 52 வருவாய் கிராமங்களில் கடந்த 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் உழவர் கடன் அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் பேசுகையில், விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்போர் அனைவரும் தங்கள் நிதி தேவைகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கிசான் கடன் அட்டைகளை பெற்று கொள்ளலாம். கிசான் கடன் அட்டை பிணையம் இல்லாமல் ஒருவர் ரூ.1.60 லட்சம் வரையிலும், பிணையத்துடன் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். 7 சதவீத வட்டியுடன் கடன் வழங்கபடும். உரிய காலத்துக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டித்தொகை சலுகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதும். கிசான் கடன் அட்டை பெற உரிய விண்ணப்பதுடன் ஆதார் அட்டை, நில உரிமை ஆதாரம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு முதல்பக்க நகல் ஆகியவற்றை வங்கிகளில் கொடுத்து 2 வாரத்துக்குள் கிசான் கடன் அட்டை பெற்று கொள்ளலாம் என்றார்.வேளாண் அலுவலர் நிவேதா பேசுகையில், கிசான் கடன் அட்டை 5 வருடம் வரை செல்லத்தக்கது. அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் கடன் அட்டை பெற்று உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார்.முகாமில் திருக்காட்டுப்பள்ளி தமிழ்நாடு கிராம வங்கியின் மேலாளர், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர், அலமேலுபுரம்பூண்டி மற்றும் பழமார்நேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், அலமேலுபுரம் பூண்டி கிராம விவசாயிகள் 120 பேர் பங்கேற்றனர். துணை வேளாண்மை அலுவலர் எபிநேசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் கலைவாணன், இளந்திரையன், விக்னேஷ், உதவி விதை அலுவலர் வேல்முருகன் செய்திருந்தனர்.

Related Stories: