ஊதியம் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்

விழுப்புரம், ஜூலை 24: ஊதியம் வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் நகராட்சி 38 வார்டுகளாக இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 42 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள் தனியார் நிறுவனத்திடம் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாதந்தோறும் 20ம் தேதிக்கு மேல் ஊதியம் வழங்கப்படுவதாகவும், முழுமையான தொகை வழங்கப்படாமல், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் இதனை பிடித்தம் செய்து முறைகேடு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே கடந்த மாதம் வேலை பார்த்ததற்கான ஊதியம் நேற்றுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் இல்லாததால் நேருஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், பயோ மெட்ரிக் முறையை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தோம். தற்போது கைரேகை வைத்தாலும் பதிவு ஆகாமல் உள்ளது. வேலைக்கு வந்தும் வரவில்லை என்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முறையை அகற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் வழங்கும் முழு ஊதியத்தையும் வழங்காமல் முறைகேடு செய்கின்றனர் என்று கூறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். முறைப்படி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்குமாறு கூறி அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: