ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

விழுப்புரம், ஜூலை 24: ஆடி அமாவாசை

திருவிழாவையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வருகிற 31ம் தேதி நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து முன்னேற்பாடுபணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. இதில் ஆட்சியர் பேசுகையில், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், போக்குவரத்துத்துதுறை மூலம் சிறப்பு பேருந்துகள இயக்க போக்குவரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேருந்துகள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல்துறை, இந்து அறநிலையத்துறை, போக்குவரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின்தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோயிலில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழுக்கள் மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோயில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூடுதல் எஸ்பி சரவணக்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் செயல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: