சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று கூட்டம் துவங்கியதும் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் ஒரு பிரச்னையை எழுப்பி பேசியதாவது:  தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில்,  கடந்த மாதம் 7ம்தேதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன? எப்போது அமல்படுத்தப்போகிறீர்கள்?  யார் தடையாக இருக்கிறார்கள்?. அமைச்சர் கந்தசாமி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றக் கோப்பு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தலைமைச் செயலரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவரே ஒப்புதல் தராமல் மீண்டும் அதனை துணைநிலை ஆளுனருக்கே அனுப்பியிருக்கிறார். ஒப்புதல் கிடைத்தவுடன் பெயர் மாற்றம் செய்யப்படும்.அனந்தராமன்(காங்கிரஸ்):  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்று கூறிவிட்டபோது தலைமை செயலர் கோப்பினை ஏன் துணைநிலை ஆளுருக்கு அனுப்பினார்?  அதிகாரிகளின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்றுதான் செயல்பட்டு வருகின்றனர். விதிகளை மதிக்காமல் தோன்றித்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்பழகன் (அதிமுக):  நான் கேட்டது,  இந்த மாதம் அரிசி போடப்படுமா? இல்லையா? அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு உண்மையிலே உரிய மரியாதை இருக்கிறதா?   அரசின் உத்தரவை ஏற்று  செயல்பட அதிகாரிகள் மறுக்கிறார்கள்?  அதனை தட்டிக்கேட்கக்கூடிய முடியாத  வகையில் ஆளும் கட்சியின்  செயல்பாடு இருக்கிறது.

முதல்வர் நாராயணசாமி:   இந்த மாதம் 10ம்தேதி ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் தொடர்பான கோப்பினை தலைமை செயலருக்கு அனுப்பி வைத்தேன். அதனை அவர் துணைநிலை ஆளுனருக்கு அனுப்பியுள்ளார். அரசின் உத்தரவை ஏற்று செயல்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அதிகாரிக்கு இருக்கிறது. எனவே தலைமை செயலரை மீண்டும் அழைத்து உடனடியாக பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையை வெளியிடுமாறு உத்தரவிடுகிறேன்.  மாநிலங்களைப் பொறுத்தவரை அரசு ஒரு முடிவு எடுத்து ஆளுனருக்கு அனுப்பினால், அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் திரும்ப அனுப்பலாம். அதனையே மீண்டும் அனுப்பினால் வேறு வழியில்லை, கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும். யூனியன் பிரதேசத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதனை டெல்லிக்கு அனுப்பலாம். ஆனால் எல்லாவற்றையும் அனுப்பக்கூடாது என டெல்லி முதல்வர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம்  தெளிவாக கூறியிருக்கிறது. இந்த விதிமுறைகள் எதையும் புதுச்சேரி அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை. இதுதொடர்பாக தலைமை செயலரை அழைத்து பேசுவேன்.அன்பழகன் (அதிமுக):   நான் இலவச அரிசி போடப்படுமா? என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை. பேச்சை திசைதிருப்பி வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்திய அரசு குறித்து பேசியதால்,  பாஜக எம்எல்ஏக்கள் குறுக்கிட்டு மத்திய அரசின் மீது எதற்கெடுத்தாலும் குற்றம் சாட்ட வேண்டாம்.  மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் எப்போதும்  உறுதுணையாக இருக்கிறோம்.  தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அன்பழகன் (அதிமுக):   மீண்டும், மீண்டும் நியமன எம்எல்ஏ என்று, கூறுவது தவறு.  நீதிமன்றம் வரை சென்று தாங்கள் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். மற்ற எம்எல்ஏக்களைபோல்  அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. தொடர்ந்து அவர்களை நியமன எம்எல்ஏக்கள் என்று அழைத்து சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கிறீர்களா? அதிகாரிகள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது, இதுவரை யார் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த தைரியம் இல்லை.  அரசு ஊழியர்கள் ஒழுங்கீனம் கொடிகட்டி பறக்கிறது. 10 அதிகாரிகள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? அந்த தைரியம் இருக்கிறதா?

சபாநாயகர் சிவக்கொழுந்து:

அரசு துறைகளில் பல பதவிகள் காலியாக  உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி அரசு அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். ஒரு துறையின் பெயர் மாற்றும் விவகாரத்தில் அரசாணை வெளியிடப்படவில்லை.  எனவே உயர்நீதிமன்ற  தீர்ப்பை பின்பற்றாமல் இருக்கும் அதிகாரிகளை இந்த சட்டமன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அரசின் உத்தரவுகளை ஏற்று செயல்படுத்த தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. ‘ஆட்சியை கலைத்து விட்டு போங்கள்’ எம்என்ஆர் பாலன் (காங்கிரஸ்)  மக்களால்  தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும்  அதிகாரிகள் செயல்பாடு மாறவில்லை. இந்த அரசு  அவர்களை எதுவுமே செய்யவில்லை. ஆளும் கட்சியாக இருந்து கொண்டு எதுவுமே செய்ய  முடியாததற்கு எதற்கு இந்த ஆட்சி? கலைத்து விட்டுப்போங்கள். நம்மால் ஒரு  அதிகாரி மீது கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் நாம் எதற்காக இந்த  ஆட்சியை நடத்திக்கொண்டிருக்க வேண்டும். மக்கள்  நலத்திட்டங்களுக்கு தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது இப்போதே, உங்களால்  நடவடிக்கை எடுக்க முடியுமா? மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசாக ஆளும் அரசு  இருக்கிறது.  கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர், ஒரே விஷயத்தைத்தான், திரும்ப,  திரும்ப கூறி வருகிறார். அரைத்தமாவையே அரைக்கிறார்.  அரசு செயலர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதை முதலில் சொல்லுங்கள்.

Related Stories: