கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி நூதன மோசடி

புதுச்சேரி,  ஜூலை 24:  புதுவை வாலிபரை கனடாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி  வேறுநாட்டுக்கு அனுப்பி நூதன முறையில் பண மோசடி செய்ததாக தனியார் நிறுவன  உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை  தேடி வருகின்றனர். புதுவை, நைனார்மண்டபம், அரவிந்தர் வீதியில்  வசிப்பவர் நாகராஜன் மகன் முத்துகுமார் (29). தனியார் நிறுவன ஊழியரான இவர்  கடந்தாண்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டு அரியாங்குப்பம், இசிஆரில் உள்ள  ஒரு நிறுவனத்தை நாடியுள்ளார். அந்நிறுவன உரிமையாளரான செல்வராஜ் (43),  கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கு ரூ.5 லட்சம் செலுத்த  வேண்டுமென கூறினாராம். இதையடுத்து 2 தவணையாக பணத்தை செலுத்திய  முத்துகுமாரை கனடாவுக்கு பதிலாக வேறு நாட்டிற்கு வேலைக்கு அனுப்பியதாக  தெரிகிறது. அங்கு சில காலம் இருந்துவிட்டு வேலையில்லாமல் ஏமாற்றத்துடன்  புதுச்சேரி திரும்பிய முத்துகுமார், கடந்த 10ம் தேதி செல்வராஜை சந்தித்து  தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது  செல்வராஜூம், அவரது மனைவி கல்பனாவும் சேர்ந்து முத்துகுமாரை மிரட்டியதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் முத்துகுமார்  நேற்று முன்தினம் முறையிட்டார். அதில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்து மோசடி  செய்து கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கூறியிருந்தார். புகாரின்பேரில் வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் பாபுஜி,  எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் செல்வராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவான  அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

Related Stories: