×

விருத்தாசலத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம், ஜூலை 24: விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், நிர்வாக நடுவர் நீதிமன்ற மன்ற இடத்தகராறு தொடர்பாக வழக்கு நடந்துள்ளது. இவ்வழக்கில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விநாயகம் ஆஜராகி, விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த்திடம் வழக்கு சம்பந்தமாக தன் வாதத்தை எடுத்துரைத்தபோது, சார் ஆட்சியர் பிரசாந்த், வழக்கறிஞரை அவமதித்து பேசியதாக  கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சங்க தலைவர் மகேந்திரவர்மன், அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் சிவாஜிசிங், விருதை பார் அசோசியேஷன் சங்க தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், விருத்தாசலம் நீதிமன்றத்தை புறக்கணித்து, விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலை சந்திப்பில் இருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக வந்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சார் ஆட்சியர் பிரசாந்த், வழக்கறிஞர்களை புறக்கணித்து நடந்து கொள்வதாகவும், இதனால் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சார் ஆட்சியர் பிரசாந்த்தை இடமாற்றம் செய்ய வேண்டும், மேலும் வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் கோட்ட உதவி காவல் துணை கண்காணிப்பாளர் தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார், வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வழக்கறிஞர்கள் சமாதானம் அடையாமல், சார் ஆட்சியர் வந்து மன்னிப்பு கேட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்த சார் ஆட்சியர் பிரசாந்த், மதிய உணவு இடைவேளையின்போது வருவதாக கூறப்பட்ட நிலையில், அப்போதும் சார் ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன், விருத்தாசலம்- கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவியது.இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார், வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது