பாப்பாக்குடி - முக்கூடலை இணைக்கும் குண்டும் குழியுமான அமர்நாத் காலனி மெயின் ரோடு

பாப்பாக்குடி, ஜூலை 24: பாப்பாக்குடி - முக்கூடலை இணைக்கும் அமர்நாத் காலனி மெயின்ரோடு உருக்குலைந்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.பாப்பாக்குடி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அமர்நாத் காலனியில் சாலை அமைத்து சுமார் 12 வருடங்கள் மேல் ஆகிறது. அதன்பிறகு இதுவரை சீரமைக்கப்படாமல் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வளர்ந்து வரும் பகுதியான அமர்நாத் காலனியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதி செய்யப்பட வில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. பாப்பாக்குடி முக்கூடலை இணைக்கும் இந்த ரோட்டில் தான் தினமும் பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் கம்பெனி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. பாப்பாக்குடி, துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவியர் சாலை சரியில்லாத காரணத்தால் பல கிலோமீட்டர் சுற்றி போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகளின் நலன் கருதி சாலையை உடனே சரி செய்து அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும் என  பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: