களக்காடு அருகே பத்மநேரி பெரிய குளத்தில் குடிமராமத்து பணி

களக்காடு, ஜூலை 24: களக்காடு அருகே பத்மநேரி பெரியகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.களக்காடு அருகே பத்மநேரி பெரியகுளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 350 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் குளத்தில் மண்மேடுகள் ஏற்பட்டுள்ளன. செடி-கொடிகளும் அடர்ந்துள்ளதால் குளத்தில் போதுமான தண்ணீர் தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. முன்பு குளத்தில் ஒரு முறை தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி இரு முறை விவசாய பணிகள் மேற்கொள்ளலாம் என்றும், தற்போது ஒரு முறை கூட விவசாயம் செய்ய முடிவதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதனிடையே தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பத்மநேரி பெரியகுளம் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. குளத்தின் கரைகளும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், குளத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இதுபோல வடமலைசமுத்திரம் சம்பன்குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், இடையன்குளம் அருகேயுள்ள ராமன்குளத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அவருடன் நாங்குநேரி தாசில்தார் ரஹமத்துல்லா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், இளநிலை பொறியாளர் இந்திரா மற்றும் வருவாய்துறையினர் சென்றனர்.

Related Stories: