திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோயில் ஆடி கொடை விழா கால்நாட்டு வைபவம்

திருச்செந்தூர், ஜூலை 24: திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயிலில் ஆடி கொடை விழாவிற்கான கால்நாட்டு வைபவம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.  திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. இதில் மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியை தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளத்துடன் அம்மன் திருக்கும்பம் நகர்வலம் வந்தது. நேற்று காலை அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து சுவாமிகள் கும்பம் எடுத்து வீதி வலம் வந்து கோயிலை சேர்ந்தது. பின்னர் 12 மணிக்கு திருக்காலுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அங்கிருந்து சுவாமிகள் திருக்கால் எடுக்கப்பட்டு முத்தாரம்மன் கோயில் வழியாக சுடலைமாடசுவாமி கோயிலுக்கு வந்தடைந்ததும் கால்நாட்டு வைபவம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். மாலையில் சிறுவர்கள், சிறுமிகள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. வரும் 30ம் தேதி சுடலைமாடசுவாமி கோயிலில் கொடை விழா  விமரிசையாக நடக்கிறது. ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகா சபையினரும், கொடை விழா கமிட்டியினர் உள்ளிட்டோரும் செய்து வருகின்றனர்.

Related Stories: