×

அதிகாரிகள் பாராமுகத்தால் கழிவு நீர் குட்டையான அய்யனேரி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள அய்யனேரி பல ஆண்டாக தூர்வாராததால் தூர்ந்து வருகிறது. வடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள அய்யனேரி 116 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீரை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஆரம்ப காலத்தில் விவசாயம் செய்வதற்கும் குடிநீராகவும் பயன்படுத்தினர். பின்னர், நாளடைவில் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் விவசாயம்  நலிவடைந்து. இதன் பிறகு அப்பகுதி விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்துவிட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த ஏரி,  திருமலைவாசன் நகர், எட்டியம்மன் நகர், ராஜாமணி நகர்,  ராம் நகர், சுதர்சனம் நகர், அல் அமீன் நகர் செயின்ட் பீட்டர் நகர், ஜோசப் நகர், ஆண்டனி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் குறைந்து வறட்சி ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி சமூகவிரோதிகள் ஏரி மற்றும் கரை பகுதி நிலங்களை ஆக்கிரமித்து ஏழை, எளிய மக்களுக்கு விற்பனை செய்தனர். தற்போது, ஏரியை சுற்றி பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், ஆக்கிரமிப்பாளர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுகின்றன. இதோடு மட்டுமல்லாமல், ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர் பகுதியில் உள்ள  வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை நள்ளிரவில் லாரிகள் மூலம் ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரி நீர் கடந்த சில ஆண்டுகளாக மாசு ஏற்பட்டு நிலத்தடி நீரும் குறைந்ததால் மக்கள் தண்ணீருக்காக அவதிப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக ஏரியை பொதுப்பணித்துறை நிர்வாகம் சரிவர பராமரிப்பு செய்யவில்லை. பல ஆண்டாக ஏரி தூர் வாரி ஆழப்படுத்தப்படாமலேயே  கிடக்கிறது. இதனால், மழை நீரை ஏரிகள் முழுமையாக சேமிக்க முடியவில்லை.  எனவே, வருங்காலத்தில் நிலத்தடி நீர் பிரச்னையை தீர்க்க அய்னேரியை தூர்வாரி ஆழப்படுத்தினால், வரும் மழை காலங்களில் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அய்யனேரியை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நடைபாதை அமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஏரியை சுற்றி எல்லையை வரையறை செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், வருங்காலத்தில் ஏரியை சமூகவிரோதிகள் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. மேலும், ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செய்ய  நடைபாதை அமைத்து தர வேண்டும். இதனால், பொதுமக்களுக்கு பொழுது போக்கு இடமாகவும் மாறும். அப்படி செய்தால் ஏரியை பாதுகாக்க முடியும் என்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...