துப்புரவு பணிகள் சுணக்கம் சாலைகளில் குப்பை குவியல்: பம்மல் நகராட்சியில் அவலம்

பல்லாவரம்: பம்மல் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் தேங்கும் குப்பையை நகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. போதிய குப்பை தொட்டிகளும் வைப்பதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பம்மல் ஏழுமலை தெரு, நல்லதம்பி சாலை மற்றும் எம்ஜிஆர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சரிவர துப்புரவு பணி மேற்கொள்ளப்படாததால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளிலும் தொட்டிகள் வைக்காததால், பொதுமக்கள் குப்பையை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பையை அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடு, நாய் போன்றவை கிளறுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சாலையில் செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.மேலும், சாலையில் சிதறும் குப்பை அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுவதால், அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. ஆங்காங்கே மலைபோல் தேங்கும் குப்பையில் கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பம்மல் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. இதனால், சாலைகளில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. எம்ஜிஆர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே குவிந்துள்ள குப்பையால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் போதிய தொட்டிகள் வைப்பதில்லை. நகராட்சி அலுவலகத்தில் பல மாதங்களாக ஆணையர் இல்லாததால், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய சரியான அதிகாரிகள் இல்லாமல், பொதுமக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை அள்ளும் தனியார் ஒப்பந்ததாரரிடம், நகராட்சி அதிகாரிகள் கமிஷன் பெற்றுக்கொண்டு, இதுபற்றி கண்டுகொள்வதே இல்லை. எனவே, தங்களது பணியை முறையாக செய்யாத தனியார் குப்பை அள்ளும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, முறையாக குப்பை அள்ளும் புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: