×

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அடிப்படை வசதி கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் கண்ணன்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் ஜூலை முதல்  தேதியிலிருந்து அத்தி வரதர் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளார். முதல் நாளிலிருந்து நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.  கூட்டத்தை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சரியாக செய்யவில்லை.

இதனால், தரிசனத்திற்காக பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் மாவட்ட கலெக்டர் எந்தவித முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை.எனவே, அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...