ஓஎம்ஆர் - இசிஆர் பகுதியை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் சேதம்

* கண்டுகொள்ளாத அதிகாரிகள்

* விபத்து ஏற்படும் அபாயம்

துரைப்பாக்கம்: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டுமென்றால், திருவான்மியூர் அல்லது சோழிங்கநல்லூர் சென்று தான் சுற்றி வர வேண்டும். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சொந்த செலவில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மரப்பாலம் அமைத்து கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்று வந்தனர். மழைக்காலங்களில் இந்த மரப்பாலம் சேதமடைவதால், இதை அகற்றி கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும், என கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் இருந்த மரப்பாலம் அகற்றப்பட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக பொதுமக்கள் நடந்தும், பைக், ஆட்டோ ஆகிய வாகனங்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, பல்லாவரம், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி சாலை வழியாக வருவோர், கிழக்கு கடற்கரை சாலைக்கு இந்த பாலம் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் சென்று வருகின்றனர். இதனால் நேரம் மிச்சமாவதோடு குறிப்பிட்ட இடத்திற்கும் விரைவில் சென்று வரும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரை செல்லும் தரைப்பால தடுப்புச்சுவர் மற்றும் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பாலம் சென்னை மாநகராட்சி 15வது மண்டலத்திற்கு உட்பட்ட 193வது வார்டில் ஒரு பகுதியும், நீலாங்கரை 192வது வார்டில் ஒரு பகுதியும் உள்ளதால் இதை சரி செய்வது யார்? என்பதில் இரு வார்டு அதிகாரிகளிடையே போட்டா போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் தாங்களாகவே முன் வந்து சொந்த செலவில் விரிசல் அடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர். விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் வந்து இந்த பாலத்தை ஆய்வு செய்து, தரமான முறையில் சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: