×

பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடி, ஜூலை 24: வாணியம்பாடியில் பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ரேஷன் கடை (எண்.2) இயங்கி வருகிறது. இந்த கடையை குறிப்பிட்ட நேரத்தில் திறப்பதில்லையாம். மேலும் ரேஷன் பொருட்களையும் சரிவர வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்டால், ‘அரிசி, சர்க்கரை, பருப்பு எதுவுமே இன்னும் வரவில்லை. வந்தால்தான் தருவோம்’ எனக்கூறி பொதுமக்களை அலைக்கழித்து வருகிறாராம். இதுதொடர்பாக கற்பகம் கூட்டுறவு கடை மேலாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தபோதும் அவரும், ‘நாங்கள் எதுவும் செய்யமுடியாது, பொருட்கள் வந்தால்தானே தரமுடியும்’ எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.

இதை கண்டித்து பொதுமக்கள் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கற்பகம் கூட்டுறவு கடை மேலாளர் ஞானவேல், சூபர்வைசர் ரவி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கவும், ரேஷன் பொருட்களை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்