×

திடக்கழிவு மேலாண்மை திட்டம் அந்தமானில் செயல்படுத்தப்படும்

வேலூர், ஜூலை 24: வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அந்தமானில் செயல்படுத்தப்படும் என்று காட்பாடியில் ஆய்வு செய்த அந்தமான் மேயர் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இப்பணியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு டன் குப்பை ₹1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்மாதிரி திட்டமாக செயல்படும் இந்த திட்டத்தை அறிந்த பல்வேறு மாநில அதிகாரிகள் குழுவினர் இங்கு ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். இதனை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கேட்டறிந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தை பார்வையிட அந்தமான் யூனியன் பிரதேசத்தில் உள்ள போர்ட்பிளேயர் மாநகராட்சி மேயர் அனுசுயாதேவி தலைமையில் பொறியாளர் கருப்பையா, திட்ட அலுவலர் சுஜித்பாலா, கவுன்சிலர்கள் கிரிகோரி, சோமேஸ்வரராவ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் மாநகராட்சி 1வது மண்டலம் காந்திநகரில் செயல்பட்டு வரும் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குப்பைகள் சேகரித்தல், உரம் தயாரித்தல் பகுதிகளை பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தனர். அதற்கான விளக்கங்களை உதவி கமிஷனர் மதிவாணன் விளக்கினார். இதுகுறித்து மாநகராட்சி மேயர் அனுசுயாதேவி கூறியதாவது: நாங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று முன்மாதிரி திட்டங்களை ஆய்வு செய்து அதனை எங்கள் பகுதியில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் செயல்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் பார்வையிட்டபோது, இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதாக தெரிவித்தனர். அதன்படி வேலூரில் ஆய்வு மேற்கொண்டோம். திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகள் உடனே கிடங்கிற்கு வருகிறது. பின்னர் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கோழி, வான் கோழிகள் மூலம் மேயவிடப்பட்டு மீதியுள்ளவை தரம் பிரிக்கப்படுகிறது. இது எங்களுக்கு புதிய திட்டமாக தோன்றுகிறது. இதனை நாங்கள் அந்தமானில் செயல்படுத்துவோம். மேலும் இதனை வீடுகளில் ஆய்வு செய்தபோது பொதுமக்களே குப்பைகளை வெளியே வீசாமல் மக்கும், மக்காத குப்பைகளாக சேகரித்து தருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...