×

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி அரசு அலுவல் பயணத்தின்போது அமைச்சர்கள் பிரசாரம் செய்ய தடை தேர்தல் ஆணையம் உத்தரவு

வேலூர், ஜூலை 24: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்கள் அலுவல் முறை பயணத்தின்போது பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம்தேதி நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்வு கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும் தீவிர ரோந்து பணிகள் நடந்து வருகிறது. பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீதி, வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருகட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வேலூரில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையமும் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் ஆளுங்கட்சியினர் தேர்தல் பிரசாரத்திற்காக தங்களது அதிகாரத்தை பயன்படுத்த கூடாது. அமைச்சர்கள் அரசு அலுவல் முறை பயணத்தின்போது தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது.

அரசு விமானம், வாகனங்கள் உள்பட அரசு போக்குவரத்தை அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் ஆளும் கட்சியின் நலனுக்காக பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...