லஞ்சம் பெற்றதை மறைக்க வாலிபர் மீது பொய் வழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்: பரபரப்பு தகவல்

தாம்பரம், ஜூலை 24: மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் தீபக் (30). இவர், புதிதாக கார் வாங்க திட்டமிட்டு, கடந்த 20ம் தேதி காலை வேளச்சேரியில் உள்ள ஷோரூம் சென்றார். அங்கிருந்து ஒரு காரை சோதனை ஓட்டத்திற்காக வரவழைத்துள்ளார்.அந்த காரை தீபக் ஓட்டினார். அவரது நண்பர் அருகில் உள்ள சீட்டிலும், காரின் பின்புற சீட்டில் கார் ஷோரூமின் ஊழியரும் அமர்ந்து  சென்றுள்ளனர். பழைய ஸ்டேட் பாங்க் காலனி 3வது தெருவில் திருப்ப முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த சாய்தளம் மீது கார் ஏறி  தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால், சிஎஸ்ஆர் வாங்கி காப்பீடு மூலம் காரை சரிசெய்து கொள்ளலாம் என நினைத்து, கார் ஷோரூம் ஊழியர் மற்றும் தீபக் ஆகியோர் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் சென்றனர். அங்கிருந்த சிறப்பு எஸ்ஐ குணசேகரன் என்பவரிடம் சிஎஸ்ஆர் வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அப்போது, அவர் சிஎஸ்ஆர் தயார்செய்து அதற்கு தீபக்கிடம் ₹2750  கேட்டுள்ளார். அதற்கு எதற்கு பணம் செலுத்தவேண்டும் என அவர்கள் கேட்டனர். பணத்தை கட்டவில்லை என்றால் ரிமான்ட் செய்துவிடுவோம் என எஸ்எஸ்ஐ குணசேகரன் மிரட்டியுள்ளார். கடைசியில் ₹1000க்கு பேரம் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டு சிஎஸ்ஆர் வழங்கியுள்ளார்.இந்த சம்பவத்தின்போது அங்குள்ள போலீசாருக்கு டீ கொடுக்க வந்தவரிடம் டீ வாங்கி குடித்த எஸ்எஸ்ஐ குணசேகரன், அன்பு, கஜமோகன் மற்றும் போலீசார், தீபக்கை அழைத்து நாங்கள் டீ குடித்ததற்கு ₹105ஐ டீ கொடுத்தவரிடம் கொடு என வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த செய்தி டிவி, பத்திரிகை நிருபர்களுக்கு தெரியவந்ததால், பயந்துபோன போலீசார் சம்பந்தப்பட்ட கார் ஷோரூம் ஊழியர்களை மீண்டும் வரவழைத்து, அவர்களிடம் பணம் எதுவும் வாங்கவில்லை என மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர்.
மேலும், தீபக் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களை அங்கிருந்து அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.அதன்படி, தீபக் மீண்டும் அங்கு சென்றபோது, அவரிடம் ₹1000 கொடுத்தனர். பின்னர், தீபக்கை தங்களது பைக்கில் தாம்பரம் மேம்பாலம் அருகே அழைத்து சென்ற போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, போக்குவரத்து போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்து, தீபக்கிடம் ₹1000 அபராதம் வசூலித்தனர்.சேதமடைந்த காரை காப்பீடு மூலம் சரி செய்ய சிஎஸ்ஆர் மட்டுமே கேட்டதற்கு, லஞ்சம் பெற்றதை மறைத்து அவர்கள் தப்பிக்க மீண்டும் தீபக்கை போக்குவரத்து போலீசாரிடம் அழைத்து சென்று அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கூறி ₹1000 அபராதம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுபற்றி  விசாரித்த உயரதிகாரிகள், ₹1000 லஞ்சம் பெற்ற எஸ்எஸ்ஐ குணசேகரனை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குணசேகரன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு 2,577 வாக்குச்சாவடிகள் தயார்