அத்திவரதர் வைபவம் நடைபெறும் பகுதியான வரதராஜ பெருமாள் சன்னதி தெரு மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம்: வாகனங்களும், நடந்து செல்லவும் தடை விதித்ததால் ஆத்திரம்

காஞ்சிபுரம், ஜூலை 24:  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் இருந்து தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.வரதராஜ பெருமாள் கோயில் வளாகம் அருகில் உள்ள செட்டித்தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், பெரியார் நகர், திருவீதிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் வெளியில் இருந்து தங்கள் பகுதிக்கு வருவதற்கும் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தால் இயக்கப்படும் மினி பஸ்களும் செட்டித்தெரு சந்திப்புக்கு பிறகு செல்லாமல் திருப்பி விடுகின்றனர்.வடக்கு மாடவீதி வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் பிரதான சாலையான வடக்கு மாடவீதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஷேர் ஆட்டோக்களும் செல்ல முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் உள்ளூர் பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லமுடியாத அளவுக்கு சிரமப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள மக்கள் சர்வ சாதாரணமாக சென்று வருவதற்காக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் வரதராஜ பெருமாள் சன்னதி தெரு மக்களின் வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் செல்வதற்கும் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், கடும் சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் சென்று வந்ததாக கூறப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் சென்று, முறையிட்டனர். அப்போது, அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாளில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்களை அடையாளம் கண்டுகொள்ளாததால் பிரச்னை ஏற்படுகிறது. எனவே சன்னதி தெருவில் உள்ளூர் போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கூறினர்.பொதுமக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கோயில் நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், நேற்று முன்தினம் இரவு வரதராஜ பெருமாள் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு 2,577 வாக்குச்சாவடிகள் தயார்