×

சொத்துவரி செலுத்தாததால் வீட்டின் முன் குப்பை கொட்டிய துப்புரவு தொழிலாளர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் வந்தவாசி அடுத்த தேசூரில் பரபரப்பு

வந்தவாசி, ஜூலை 24: வந்தவாசி அடுத்த தேசூரில் சொத்துவரி செலுத்தாததால் வீட்டின் முன் குப்பை கொட்டிய பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி அடுத்த தேசூர் பகுதி மழையூர் சாலையில் ஜீக்கிரியா என்பவரின் மனைவி சோட்டிமா என்பவரது பெயரில் மாடி வீடும், தரை தளத்தில் 3 கடைகளும் உள்ளன. இவர் கடந்த மார்ச் மாதம் வரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொத்து வரி, குடிநீர் வரி ₹8 ஆயிரம் செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், சொத்து வரி 3 மடங்கு உயர்ந்ததால் தேர்தலுக்கு பிறகு குறைக்க வாய்ப்பு உள்ளதாக பேரூராட்சி நிர்வாக்தினர் ெதரிவித்தனர். இதனால் சோட்டிமா வரியை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தார். தற்போது பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் பிலிக்ஸ் என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன் பெறுப்பேற்றார். இதையடுத்து, செயல் அலுவலர் வந்தவாசி பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி வசூல் செய்து வந்தால்தான் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், சோட்டிமா கட்ட வேண்டிய தொகையை பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் பணி செய்யும் துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஊழியரிடம் பில் தொகைக்கான ரசீதை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஊழியர்கள் நேற்று முன்தினம் சோட்டியமாவிடம் வரி பணம் செலுத்தும்படி கூறினர். தற்போது பணம் இல்லை 15 நாள் கழித்து பணம் செலுத்துவதாக சோட்டிமா கூறினாராம். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பஜாரில் சேமிக்கப்பட்ட குப்பையை லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சோட்டிமாவின் மாடி வீட்டிற்கு செல்லும் படி முன் கொட்டியுள்ளனர். மேலும், வரி பணம் செலுத்தினால்தான் குப்பையை அகற்றுவோம் என்று ஊழியர்கள் கூறினார்களாம். இதை பார்த்து ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் பேரூராட்சியை கண்டித்து தேசூர்- மழையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்காத பொதுமக்கள் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும், ேபரூராட்சி நிர்வாகத்தினர் இதற்கு உரிய பதில் கூறவேண்டும் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சோட்டிமாவிற்கு ஆதரவாக திமுக நகர செயலாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி மனோகரன், விசி நிர்வாகி பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஏ.செல்வம், சிவா உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் பிலிக்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து குப்பையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை உடனடியாக ெசலுத்த வேண்டும் என்றார்.
அப்போது பொதுமக்கள் கடந்த 6 மாதங்களாக தெள்ளார்- தேசூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வில்லை குடிநீர் வழங்காமலேயே வரியை மட்டும் கேட்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர். பின்னர் குப்பையை அகற்றியதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...