×

திருவள்ளூர் நகராட்சியில் இருந்து புட்லூர் ஏரியில் விடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு: திமுக எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர், ஜூலை 23: திருவள்ளூர் நகராட்சியின் கழிவுநீர் புட்லூர் ஏரியில் விடுவதால் நிலத்தடிநீர் மாசுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பூந்தமல்லி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, சேரும் கழிவுநீர் அனைத்தும் நகராட்சியின் எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, அருகில் உள்ள புட்லூர் ஏரியில் பைப்லைன் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், புட்லூர் ஏரியின் நிலத்தடிநீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதாகவும், குடிநீர் மாசடைந்து வருவதாகவும் ஏரியை சுற்றியுள்ள கூட்டுறவு நகர், கணேஷ் நகர், டிஎல்பி நகர், பிருந்தாவனம் நகர், கோமதி அம்மன் நகர், விஐபி நகர், புட்லூர் காலனி, மோகனா நகர், சாய்ராம் நகர் ஆகிய பகுதி மக்கள் தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் புகார் தெரிவித்தனர். நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதால், சுகாதாரமான குடிநீரின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிப்படுவதாகவும் புகார் கூறினர்.இதையடுத்து நேற்று ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் மற்றும் திமுக நிர்வாகிகள் புட்லூர் ஏரிக்கு சென்று கழிவுநீர் கலக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் எம்எல்ஏ  தெரிவித்தார்.
 



Tags :
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...