×

குமரநாயக்கன்பேட்டை வெக்காளியம்மன் கோயில் தீமிதி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி, ஜூலை 23: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரநாயக்கன் பேட்டை  வெக்காளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் 14ம் ஆண்டு ஸ்ரீநவசண்டி யாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், மறுநாள் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகளும் நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றிரவு ஸ்ரீகிருஷ்ண லீலா தெருக்கூத்து நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவசண்டி யாகபூஜை, கலச அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை காப்பு கட்டிய 900 பக்தர்கள் வேப்பிலை அணிந்து, நாக்கில் வேல் தரித்து, ஒவ்வொருவராக தீக்குழிக்குள் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இவ்விழாவில் குமரநாயக்கன்பேட்டையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இரவு வெக்காளியம்மன் திருவீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாககள் சிறப்பாக செய்திருந்தனர். இங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசாரும், தீ விபத்துகளை தடுக்க சிப்காட் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சின்ன வண்ணாங்குப்பம்  கிராமத்தில்  திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 28ம் ஆண்டு தீ மிதி திருவிழா கடந்த 12ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து  இரண்டாவது நாள் பக்காசூரன் வதம், மூன்றாவது நாள் திருக்கல்யாணம், நான்காம் நாள் நச்சி குழியாகம்,  ஐந்தாம் நாள் அரக்கு மாங்கோட்டை, ஆறாவது நாள் அர்ஜுனன் தபசு, ஏழாவது நாள் தர்மராஜா வீதியுலா, எட்டாவது நாள் மாடுபிடி சண்டை, 9ம் நாள் துரியோதனன் படுகளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10வது நாளான கிராம எல்லையிலிருந்து உற்சவரான திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக  தீ மிதிக்கும் இடமான வெங்கட்டம்மன் கோயில் வளாகத்திற்கு  வந்தது. உடன் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 160  பேர் அம்மனுடன் ஊர்வலமாக வந்து  அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். கடைசி நாளான நேற்று அரவான்  இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிந்தது. நிகழ்ச்சியில் சின்ன வண்ணாங்குப்பம் ,  பெரிய வண்ணாங்குப்பம் , வண்ணாங்குப்பம், ஆத்துப்பாக்கம் என சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...