×

அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரைவு, உரிமையியல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் தேக்கம்: பொதுமக்கள் தவிப்பு

அம்பத்தூர், ஜூலை 23: அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த மூன்று மாதங்களாக உரிமையியல் மற்றும் விரைவு நீதிபதிகள் பணியில் இல்லாததால் வழக்குகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் சி.டி.எச் சாலை, மண்டல அலுவலகம் பின்புறம், நகராட்சி கட்டிடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகையில் இயங்கி வந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்தது. எனவே, இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. பின்னர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோவிற்கு சொந்தமான வாடகை கட்டிடத்திற்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் மாற்றப்பட்டது. அங்கு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.இதற்கிடையில், புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட அரசு சார்பில் ₹11.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

தற்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தற்காலிக ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்கள் அமர இருக்கைகள், குடிநீர் இல்லை. மேலும் தண்ணீர் இன்றி கழிப்பறை மூடிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், இங்குள்ள மாவட்ட உரிமையியல் நீதிபதி, விரைவு நீதிபதி இருவரும் பயிற்சிக்காக 3 மாதம் வெளியில் சென்றுள்ளனர். இதனால், பல்வேறு வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘நீதிமன்ற வளாகத்தில் குடிநீர், கழிப்பறை மற்றம் இருக்கை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், மாவட்ட உரிமையியல் நீதிபதி, விரைவு நீதிபதி இருவரும் பயிற்சிக்காக 3 மாதம் சென்றுள்ளனர். இதனால், பல்வேறு வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. மேற்கண்ட நீதிபதிகளுக்கு பதிலாக, இடைக்கால நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் புகார்கள் அனுப்பியும் பலனில்லை. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் போலீசாரும், வழக்கறிஞர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகளை செய்யவும், இடைக்கால நீதிபதிகளை நியமனம் செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...