×

கடும் வறட்சி எதிரொலி கரும்பு சாகுபடி குறைந்ததால் மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள்: கரும்பு ஆலையில் உற்பத்தி குறையும் அபாயம்

திருவள்ளூர், ஜூலை 23: திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான பரப்பில் கரும்பு பயிர்கள் கருகியதால் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பயிருக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் சர்க்கரை ஆலை நிர்வாகம் திணறி வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. மாவட்டத்தில், 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு நிலம் கரும்பு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இங்கு 12,500 கரும்பு விவசாயிகள் உள்ளனர். ஆண்டு பயிராக கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் கிணற்று நீர் பாசனம் கைகொடுத்தால் மட்டுமே ஆண்டுதோறும் நீர்பாய்ச்சி மகசூல் பெருக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றுவதாலும், கோடையில் கடும் வெப்பம் நிலவுவதால் கரும்பு பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதன் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்து 3,500 ஹெக்டேர் பரப்பில் மட்டும் கரும்பு பயிரிடப்பட்டது.இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால் கிணற்று நீர்ப்பாசனம் கைகொடுக்காமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி கருகின.

சர்க்கரை ஆலைக்கு பதிவுசெய்த கரும்புகள் கருகி போனதால் ஆலையின் அரவைக்கு தேவையான கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி அளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கரும்பு சாகுபடி செய்வதை முற்றிலும் பெரும்பாலான விவசாயிகள் தவிர்த்துள்ளனர். கிடைக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து மாற்றுப் பயிரை சாகுபடி செய்து வருவாய் ஈட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சர்க்கரை ஆலையின் அரவை திறனுக்கு தேவையான கரும்பு கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...