×

விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி: உடலை உடனே பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனை முன் மக்கள் மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர், ஜூலை 23: திருவள்ளூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், சட்டக்கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பரிசோதனை செய்து தரக்கோரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் தேவபுத்திரன்(28). இவர், பட்டறைபெரும்புதூரில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எல்., படித்து வந்தார்.

இவர், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் தனக்கு சொந்தமான பைக்கில், கல்லூரி நண்பர்கள் மதன் (25), தேசப்பன் (27) ஆகியோரை உட்கார வைத்துக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்றார்.திருப்பாச்சூர் அருகே வரும்போது, எதிரே திருப்பதி நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், பைக் ஓட்டி வந்த தேவபுத்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாலுகா போலீசார்  சென்று, காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கென அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தேவபுத்திரன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இந்நிலையில், இரவாகிவிட்டது என்பதால், நாளைதான் (இன்று) பரிசோதனை செய்ய இயலும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், உறவினர்கள், ‘’உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க வேண்டும்’’ எனக்கூறி தலைமை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு டவுன் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில், உடலை பரிசோதனை செய்து உடனே வழங்குவதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, மறியலை மக்கள் கைவிட்டனர். பின்னர், பரிசோதனை முடித்து உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், திருவள்ளூரில் இருந்து ரயிலடி, பெரும்புதூர், பூந்தமல்லி சாலையில் வாகன போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்