×

உத்தமபாளையத்தில் நடமாடும் டாஸ்மாக் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை அமோகம்

உத்தமபாளையம், ஜூலை 23:  உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கள்ளமார்க்கெட்டில் பாட்டில்களை வாங்கி கேட்கும் இடத்திற்கு சென்று விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உத்தமபாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம் பகுதியில் பைபாஸ் செல்லும் சாலையில் தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. மற்றொரு கடை ஊருக்கு மிக ஒதுக்குப்புறமாக உள்ள ராணிமங்கம்மாள் சாலையில்  செயல்படுகின்றது. இதேபோல் கோகிலாபுரம் பகுதியில் ராமசாமிநாயக்கன்பட்டி சாலையில் டாஸ்மாக் இயங்குகிறது. அனுமந்தன்பட்டியில் தனியார் பார் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால்  திண்டாடும் குடிமகன்கள் கடைக்கு போகாமல் சரக்குகளை வாங்கி குடிக்க பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, குடிமகன்களின் பிரச்னையைத் தவிர்க்க மிக தாராளமாக கள்ளமார்க்கெட்டில் மதுபான விற்பனை களைகட்டுகிறது. இங்குள்ள உ.அம்மாபட்டி, கோகிலாபுரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி மற்றும் உத்தமபாளையத்தில் பஸ்ஸ்டாண்ட், கிராமச்சாவடி, புதூர் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் கள்ளத்தனமாக மதுபானவிற்பனை நடக்கிறது. சைகை மூலம் குடிமகன்கள் சொன்னாலே இதனை டோர்டெலிவரி செய்வதுபோல் மொபைல் டாஸ்மாக் சரக்குகள் கிடைக்கின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.30 வரை அதிக விலை கொடுத்து குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர். நடமாடும் இந்த டாஸ்மாக் விற்பனையை கட்டுப்படுத்திட உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் அதிகமாக போலி சரக்குகளை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` உத்தமபாளையம் போலீஸ் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் மது விற்பனை நடக்கிறது.  கள்ளத்தனமாக விற்பனை செய்யக்கூடிய சரக்குகள் மிக தாராளமாக கிடைக்கிறது. எனவே, இதனை கட்டுப்படுத்திட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு