×

அரசு நடவடிக்கை எடுக்காததால் வாடாதவூர் கிராம ஏரியை சீரமைக்கும் கிராம மக்கள்

உத்திரமேரூர், ஜூலை 23: உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. 2 மதகுகளை கொண்ட இந்த ஏரி பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டினால், மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீர் மூலம் வாடாதவூர் கிராமத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த நிலங்களில் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்பட பல்வேறு பயிர்களை சுழற்சி முறையில் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். மேலும் கிராமத்தில் கால்நடைகள் மற்றும் கிராம மக்களின் மிக முக்கிய நீராதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. அதன் பின் ஏரியை தூர்வாரவோ அல்லது கால்வாய்களை பராமரிப்பதற்கோ பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் நாளடைவில் ஏரி தூர்ந்து, கரைகள் வலுவிழந்து, கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டன. இதனால் ஏரியில் மழைநீர் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் என்பது வாடாதவூர் கிராம மக்களின் கேள்விக்குறியாக மாறியது. விவசாயம் மட்டுமின்றி கடந்த ஆண்டு பருவமழைப் பொய்த்து போனதால் கிராமத்தில் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இதையொட்டி, வாடாதவூர் கிராம மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து அரசுதுறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து ஏரியின் மதகுகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க முடிவெடுத்தனர். அதற்கான பணியினை துவங்கினர். இதில் பழுதான மதகுகளை மணல் மூட்டைகள் அடுக்கியும், கரைகளில் மண் கொட்டியும் கால்வாய்களை சீரமைத்தும் வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் தற்போது பெய்து வரும் மழை நீரை சேமிக்கும் விதமாக இந்த ஏரியின் மதகுகள், வரத்து கால்வாய் மற்றும் உபரிநீர் கால்வாய்களை சீரமைத்துள்ளோம், இதனால் கிராமத்தில் பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் பிரச்னை தீரும். எங்களால் இயன்ற பணிகளை செய்கிறோம். அதேநேரத்தில், தமிழக அரசு கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாடாதவூர் கிராமத்தில் உள்ள ஏரியினை தூர்வாரி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...