×

மணிமங்கலம் ஊராட்சியில் விவசாய கிணறுகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து விற்பனை: பொதுமக்களை மிரட்டும் போலீசார்


பெரும்புதூர், ஜூலை 23: மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் மணிமங்கலம், அண்ணா நகர், பெரிய காலனி, இந்திரா நகர், காந்தி நகர், புஷ்பகிரி ஆகிய கிராமங்களில் 7000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவைக்காக அந்தந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் தனியார் சிலர் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை, ஓட்டல்களுக்கு தண்ணீர் விற்பனை செய்கின்றனர்.

இதனால் மணிமங்கலம் ஊராட்சியில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதையொட்டி, ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடிநீர் வற்றிவிட்டது. இதனால் மணிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.
இதுபற்றி, இப்பகுதி மக்கள் வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், மணிமங்கலம் போலீசார் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.இதனை கண்டித்து கடந்த மாதம் இப்பகுதி மக்கள் மணிமங்கலம் - முடிச்சூர் இணைப்பு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் பொது மக்களிடம் சமாதானம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், போராட்டம் நடத்தியவர்களிடம், இனிமேல் போராட்டம் நடத்தினால் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், மணிமங்கலம் ஊராட்சி பெரிய காலனியில் 3 விவசாய கிணறுகள், அண்ணா நகரில் ஒரு கிணறு, கரசங்கால் சாலை ஏரியை ஒட்டி 5 விவசாய கிணறுகள் உள்ளன. இங்கு, நிலத்தடி நீரை டேங்கர் லாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்த தண்ணீரை குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். ஆனால், போலீசார், தண்ணீரை திருடி விற்பனை செய்பவர்களை காப்பாற்றும் விதமாக, எங்களை மிரட்டினர். நிலத்தடிநீர் கொள்ளையர்களுக்கு போலீசார் துணை நிற்பதால் பல லட்சம் லிட்டர் நிலத்தடிநீர் எடுக்கப்படுகிறது. இதனால் ஊராட்சி மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டன. எனவே சட்டவிரோதமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...