×

காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தை: உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

 செங்கல்பட்டு, ஜூலை 23: காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி காமாட்சி நகரை சேர்ந்தவர் டில்லிபாபு (27). ஐடி ஊழியர். இவரது மனைவி ஜீவிதா. நிறைமாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் காலை ஜீவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், அவரை உடனடியாக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு பன்னீர்குடம் உடைந்து விட்டதாகவும், குழந்தையை பாதுகாப்பாக வெளியில் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக, அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், குழந்தையை உறவினர்களிடம் காட்டாமல் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். பின்னர் நேற்று காலை அங்கிருந்த ஊழியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். குழந்தையை பார்க்க வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, குழந்தை இறக்கவில்லை. கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினர்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் குழந்தை இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஜீவிதாவுக்கு பன்னீர்குடம் உடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்து என கூறியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனாலும், சாதாரண பிரசவத்திலேயே குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்தனர். இதில், டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்துவிட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரசவத்துக்காக மரத்துவமனையில் ஜீவிதாவை சேர்த்தோம். மாலை 5.30 மணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இரவு பிறந்ததாக கூறினர். இதுவரை குழந்தையை கண்ணில் காட்டவில்லை.குழந்தை நன்றாக இருப்பதாக கூறிய டாக்டர்கள், தற்போது குழந்தை இறந்துவிட்டதாக கூறுகின்றனர். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் யாரும் சரியான தகவல்களை தரவில்லை.

முன்னுக்குப் பின் முரணாகவே கூறுகின்றனர். நன்றாக இருந்த குழந்தை திடீரென எப்படி இறந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் மெத்தனமாகவே செயல்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் 5 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். குழந்தை இறந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்டால், எங்களிடம் டீன் மன்னிப்பு கேட்கிறார். தெரியாமல் நடந்ததாக கூறுகிறார். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...